Wall Kick: ஒரு விரிவான பயிற்சி வழிகாட்டி
Wall Kick என்பது ஒரு சுவாரஸ்யமான மற்றும் சவாலான தற்காப்புக் கலை நகர்வு. இதை முறையாகப் பயிற்சி செய்வதன் மூலம், நீங்களும் இதைச் சிறப்பாகச் செய்ய முடியும். இந்தப் பதிவில், Wall Kick-ஐ எவ்வாறு படிப்படியாகப் பயிற்சி செய்வது என்பதை நான் உங்களுக்குச் சொல்லித் தரப் போகிறேன்.
குறிப்பு: இந்தப் பயிற்சியைத் தொடங்குவதற்கு முன், நான் கீழே ஒரு சிறிய YouTube வீடியோவைப் பதிவிட்டுள்ளேன். இந்த வீடியோவில் நான் Wall Kick-ஐ மெதுவான இயக்கத்தில் (slow motion) செய்துள்ளேன். வீடியோவைப் பார்த்து, இந்தப் பதிவில் உள்ள வழிமுறைகளைப் படித்துப் புரிந்துகொண்டு பயிற்சி செய்தால், உங்களாலும் இந்த கிக்கை முறையாகச் செய்ய முடியும்.
பயிற்சி நிலைகள்:
Wall Kick-ஐ நீங்கள் செய்வதற்கு, நான் ஒவ்வொரு கட்டப் பயிற்சிகளையும் முதலில் சொல்கிறேன்.
முதல் கட்டம்:
Roundhouse kick பயிற்சி (நிலையான நிலை):-
நீங்கள் முதல் கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்றால், இந்த வீடியோவில் நான் பயன்படுத்தும் Roundhouse kick முறையை நீங்கள் ஒரே இடத்தில் நின்றபடி நன்றாகச் செய்து பழக வேண்டும். இது உங்களுக்கு மிகவும் முக்கியமான பகுதியாகும். ஏனென்றால், அந்தக் கிக் செய்யும் போதுதான் தசைப்பிடிப்புகள் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, அந்தக் கிக்கைச் சரியான முறையில் செய்து பழகிக் கொள்ளுங்கள்.
இரண்டாம் கட்டம்:
Jumping roundhouse kick பயிற்சி (குறைந்த ஜம்ப் உடன்):-
அடுத்த கட்டமாக நீங்கள் என்ன பழக வேண்டும் என்றால், அதே கிக்கைக் கொஞ்சம் குதித்து (jump) செய்து Jumping roundhouse kick பழக வேண்டும். உங்களுக்கு நிலத்திலிருந்து செய்வதை விட, குதித்துச் செய்வதுதான் கொஞ்சம் சிரமமாக இருக்கும். எனவே, அதை நன்கு பழகிக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு நன்கு பழக்கமாகிவிட்டால், அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம்.
மூன்றாம் கட்டம்:
சுழன்று தரையிறங்குதல்:-
அடுத்த கட்டமாக நீங்கள் ஓரிடத்திலிருந்து ஜம்ப் செய்து குதித்து மேலே சென்று சுழன்று கீழே தரை தொடும் பொழுது, மறுபக்கமாக இறங்க வேண்டும். இதை புதிதாகச் செய்பவர்களுக்குச் சற்று தலைசுற்றல் போன்ற பிரச்சனைகள் சிறிதளவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், பழக்கம் ஆகிவிட்டால் அந்தப் பிரச்சனை ஏற்படாது. எனவே, குதித்துச் சுழன்று தரை தொடப் பழகிக் கொள்ளுங்கள்.
நான்காம் கட்டம்:
சுவரில் உந்தி தரையிறங்குதல்:-
அடுத்த கட்டப் பயிற்சி நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், ஒரு சுவற்றை நோக்கி நீங்கள் ஓட வேண்டும். ஓடிச் சென்று, உங்களுக்குப் பழக்கமான உங்களின் ஒரு காலை (உதாரணத்திற்கு உங்களின் வலது காலை) சுவற்றில் சற்று உயரமாக வைத்து, உந்துதலுடன் குதித்து முறையாகத் தரையிறங்கிப் பழக வேண்டும். இந்தப் பயிற்சியையும் நிறைய முறை செய்து பழகிக் கொள்ளுங்கள்.
ஐந்தாம் கட்டம்:
சுவரில் உந்தி சுழன்று தரையிறங்குதல்:-
அதற்கு அடுத்த கட்டமாக நீங்கள் அதே போன்று சுவரை நோக்கி ஓடிச் சென்று, ஒரு காலை சுவற்றில் வைத்து உந்தி, குதித்து ஒரு சுழல் சுழன்று முறையாகத் தரையிறங்க வேண்டும்.
முக்கிய குறிப்பு:
இந்தப் பயிற்சி செய்யும்போது அவசரப்பட்டு கிக் செய்ய முயற்சி செய்ய வேண்டாம். ஒவ்வொரு பயிற்சியையும் தனித்தனியாகவே செய்து பழகுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்குத் தசைப் பிடிப்புகள், காயங்கள் வராமல் இருக்கும். எனவே, இதையும் முறையாகச் செய்து பழகிக் கொள்ளுங்கள்.
Wall Kick-ஐ செயல்படுத்தத் தயாராகுதல்:
நான் மேலே கூறியவற்றையெல்லாம் முறையாக நீங்கள் பயிற்சி செய்து விட்டீர்கள் என்றால், நீங்கள் Wall Kick-ஐ முறையாகச் செயல்படுத்திப் பார்க்கத் தயாராகி விட்டீர்கள் என்று அர்த்தம்.
அடுத்தது நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள்.
நீங்கள் அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறீர்கள் என்றால், நீங்கள் சுவரை நோக்கி ஓடிச் செல்லப் போகிறீர்கள். ஓடிச் சென்று, உங்களின் காலை சுவற்றில் அழுத்தமாகப் பதிக்காமல், சாதாரணமாக உயரம் குறைவாக உந்துங்கள். உந்தி, குதித்துச் சுழன்று, சாதாரணமாக ஒரு கிக் செய்து பாருங்கள். உங்களில் பலருக்கு அது சிரமமாகவே இருக்கும்.
ஏனென்றால், நீங்கள் எப்படி கிக் செய்ய வேண்டும், யாரை நோக்கி கிக் செய்ய வேண்டும் என்பதை நான் சொல்கிறேன் கேளுங்கள்:
சுவற்றுக்கு முன்னால் ஒருவன் நிற்கிறான் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் அவனை நோக்கித்தான் கிக் செய்யப் போகிறீர்கள். எனவே, நீங்கள் சுழன்று முடிவதற்கு முன்னால் கிக் செய்வீர்கள் என்றால், உங்களின் தொடைப் பகுதியில் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகமாகும். நீங்கள் நன்கு சுழன்று, உங்களுக்கு முன்னால் இருக்கும் எதிரிக்கு நேருக்கு நேர் ஆகிய பின்னரே அந்தக் கிக்கை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
அப்பொழுதுதான் உங்களின் உடல், கால், இடுப்பு, தொடை போன்றவை கிட்டத்தட்ட ஒரே நேர் பகுதியில் இருக்கும். எனவே, அந்த நேரம் தான் உங்களுக்கு கிக் செய்யப் பாதுகாப்பான நேரமாகும்.
எனவே, உங்களின் மனதின் எண்ணம் என்னவாக இருக்க வேண்டும் என்றால்:
'நான் அந்தச் சுவற்றில் கால் வைத்து உந்தி, எனக்கு முன்னால் உள்ள எனது எதிரியின் கழுத்திலோ தலையிலோ பலமாக கிக் செய்யப் போகிறேன்' என்ற எண்ணம் தான் உங்கள் மனதில் இருக்க வேண்டும்.
இதுவரை நான் சொன்ன விடயங்கள் உங்களுக்கு நன்றாகப் புரிந்து விட்டது என்றால், நான் அடுத்ததாகச் சொல்லப் போவதைப் பின்பற்றிப் பயிற்சி செய்து பாருங்கள்.
Wall Kick-ஐ முழுமையாகச் செய்தல்:
வேகமாக ஒரு சுவற்றை நோக்கி ஓடுங்கள். ஓடிச் சென்று, உங்களுக்கு முடியுமான உயரத்தில் உங்களின் காலைப் பதித்து, நன்கு உயரமாகக் குதித்துச் சுழலுங்கள்.
உங்கள் உடல் உங்களுக்கு முன்னால் கற்பனையில் இருக்கும் எதிரிக்கு கிட்டத்தட்ட நேராக வரும்பொழுது, அந்தரத்தில் இருந்தபடியே அந்த எதிரியின் கழுத்திலோ தலையிலோ கிக் செய்கிறேன் என்ற எண்ணத்தில் ஒரு பலமான கிக் விட்டு, முறையாகக் கீழே இறங்குங்கள்.
இந்தத் தரையிறங்குதலின் போது ஒரு தடுமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தரை தொடும் போதும் தரையில் ஒரு சுழல் சுற்றுங்கள். அப்படிச் சுழன்றீர்கள் என்றால், அந்தத் தடுமாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும்.அதை நான் செய்யும் யூடியூப் வீடியோவில் நீங்கள் தெளிவாகப் பார்க்க முடியும்.
எனவே, நான் இங்கு உங்களுக்காகப் பதிவு செய்துள்ள இந்த பயிற்சி முறைகளை முறையாகப் பயிற்சி செய்து, இந்த Wall Kick-ஐ நீங்களும் சிறந்த முறையில் பழகிக் கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்!